தாய்வான் வானுள் நுழைந்த 56 சீன யுத்த விமானங்கள்

தாய்வான் வானுள் நுழைந்த 56 சீன யுத்த விமானங்கள்

இன்று திங்கள் மொத்தம் 56 சீன யுத்த விமானங்கள் தாய்வானின் வான்பரப்புள் நுழைந்து உள்ளன என்கிறது தாய்வான். இதுவரை தாய்வான் வானுள் நுழைந்த அதிகூடிய யுத்த விமானங்களின் தொகை இதுவே.

இந்த 56 விமானங்களில் சீனாவின் புதிய J-16 வகை தாக்குதல் விமானங்கள் 38, H-6 வகை குண்டு வீச்சு விமானங்கள் 12, ரஷ்ய தயாரிப்பான SU-30 வகை யுத்த விமானங்கள் 2, Y-8 வகை நீர்மூழ்கி கண்டறியும் விமானங்கள் 2 ஆகியனவும் அடங்கும்.

இவற்றை தடுத்து எச்சரிக்க தாய்வான் சில விமானங்கள் அனுப்பி இருந்தது. இவ்வகை நடவடிக்கைகளுக்கு பொருளாதாரத்தில் சிறிய நாடான தாய்வான் பெருமளவு பணத்தை செலவளிக்கவேண்டி உள்ளது. அது தாய்வானுக்கு பெரும் சுமையாக உள்ளது.

அமெரிக்கா இன்று சீனாவின் மேற்படி ஊடுருவல் தொடர்பாக கவலை தெரிவித்து உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் தவறுகள் நிகழலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அதற்கு பதிலளித்த சீனா தமது உள்நாட்டு விசயத்தில் தலையிடவேண்டாம் என்றுள்ளது.

செப்டம்பர் 23ம் திகதி தாய்வான் Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership என்ற வர்த்தக அமைப்பில் இணைய விண்ணப்பித்து உள்ளமையும் சீனாவின் விசனத்துக்கு காரணம் என்று நம்பப்படுகிறது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் மாஓ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CCP), Chiang Kai-shek தலைமையிலான சீன தேசிய கட்சிக்கும் (Kuomintang) இடையில் சீனாவில் யுத்தம் ஆரம்பமாகியது. 1949ம் ஆண்டுடில் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோற்ற தேசிய கட்சியினர் சீனாவின் தீவான தாய்வானுக்கு தப்பி ஓடினர். அன்றில் இருந்து இன்றுவரை தாய்வானில் சுயாதீன ஆட்சி உண்டு. ஆனால் தாய்வான் ஐ.நா. வில் ஒரு நாடு அல்ல. தாய்வானில் சுமார் 24 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.