பிரான்சில் இறப்பிலும் பிறப்பு குறைவு

பிரான்சில் இறப்பிலும் பிறப்பு குறைவு

முதலாம் உலக யுத்தத்துக்கு பின் முதல் தடவையாக கடந்த 2025ம் ஆண்டு பிரான்சில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அங்கு மரணித்தோரின் எண்ணிக்கையிலும் குறைவாக இருந்துள்ளது.

பிரான்சின் புள்ளிவிபர அமைப்பான INSEE செவ்வாய் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த ஆண்டு பிரான்சில் 651,000 பேர் மரணிக்க, 645,000 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளன.

அதாவது fertility rate (சராசரியாக தாய்மை வயதுக்குரிய ஒவ்வொரு பெண்ணும் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை) 1.56 ஆக மட்டுமே இருந்துள்ளது. ஒரு நாட்டின் சனத்தொகை அதிகரிக்காமலும், குறையாமலும் இருக்க இந்த வீதம் 2.1 ஆக இருத்தல் அவசியம். 

1963ம் ஆண்டு பிரான்சில் பிறப்பு வீதம் 2.89 ஆக இருந்தது. அக்காலத்தில் ஆண்டு ஒன்றில் சுமார் 550,000 பேர் இறக்க சுமார் 900,000 குழந்தைகள் பிறந்து இருந்தன.

2023ம் ஆண்டு ஐரோப்பாவில் பல்கேரியா நாட்டின் பிறப்பு வீதம் 1.81 ஆக முதலிடத்தில் இருக்க, பிரான்சின் 1.65 வீதம் இரண்டாம் இடத்தில் இருந்தது.

கடந்த ஆண்டு பிரான்சில் பிறப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், மொத்த சனத்தொகை சிறிது அதிகரித்து 69.1 மில்லியன் ஆகியுள்ளது. அதற்கு காரணம் 176,000 புதிய குடிவரவாளரே.