மேற்கு ஆபிரிக்க நாடான பெனின்னில் (Benin) சில இராணுவ வீரர்கள் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு செய்ய, அண்டை நாடான நைஜீரியா தனது படைகளை அனுப்பி ஆட்சி கவிழ்ப்பை முறியடித்து உள்ளது.
டிசம்பர் 7ம் திகதி ஞாயிறு காலை பெனின் இராணுவ லெப். கேணல் Pascal Tigri தான் சனாதிபதி Patrice Talon ஐ ஆட்சியில் இருந்து விலக்கி, அந்நாட்டு சட்டங்களை இடைநிறுத்தி, ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சி மூலம் அறிவித்திருந்தார்.
ஆனால் சனாதிபதிக்கு ஆதரவான படைகள் ஆவர் பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தனர். சனாதிபதி பிரெஞ்ச் தூதரகத்தில் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பெனின் ஒரு முன்னாள் பிரெஞ்ச் ஆக்கிரமிப்பில் இருந்த நாடு.
சில மணித்தியாலங்களின் பின் மேற்படி இராணுவ சதி முறியடிக்கப்பட்டு உள்ளதாக சனாதிபதி Patrice Talon தெரிவித்து இருந்தார். பின்னர் கிழக்கு எல்லை நாடான நைஜீரியா தமது வான் படைகள் கிளர்ச்சி செய்த இராணுவத்தை தாக்கியதாக கூறியுள்ளது. Sierra Leone, Ivory Coast, Ghana ஆகிய மேற்கு ஆபிரிக்க நாடுகளும் முறியடிப்புக்கு உதவியதாக கூறப்படுகிறது.
Patrice Talon 2016ம் ஆண்டு முதல் சனாதிபதி ஆக பதவி வகிக்கிறார். 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு அடுத்த தேர்தல் இடம்பெற உள்ளது.
ஏனைய மேற்கு ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெனின் இதுவரை நிலையான சனநாயகத்தை கொண்டிருந்தது.
