மீண்டும் தாய்வானை சுற்றி சீனா பாரிய இராணுவ பயிற்சி

மீண்டும் தாய்வானை சுற்றி சீனா பாரிய இராணுவ பயிற்சி

இன்று திங்கள் பெருமளவு சீனா தரைப்படை, கடற்படை, விமான படை, ஏவுகணை படை ஆகியன தாய்வானை சுற்றி நிலை கொள்வதாக கூறியுள்ளது. மறுநாள் செவ்வாய் இடம்பெறவுள்ள Just Mission 2025 என்ற சீன இராணுவ பயிற்சிக்காகவே இந்த நகர்வு இடம்பெறுவதாக சீனா கூறியுள்ளது.

செவ்வாய் காலை 8:30 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த பயிற்சி 10 மணித்தியாலங்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் உண்மையான குண்டுகள், ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என்றும் சீனா கூறியுள்ளது. 

ஏற்கனவே சீனா இவ்வகை பாரிய பயிற்சிகள் ஐந்தை தாய்வானை சுற்றி செய்து இருந்தாலும் கடந்த சில மாதங்களாக அவ்வகை பயிற்சிகளை நிறுத்தி இருந்தது.

அண்மையில் அமெரிக்கா தாய்வானுக்கு சுமார் $11 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்ய அறிவித்தமையும், ஜப்பானின் புதிய பிரதமர் தாய்வானை சீனா தாக்கினால் ஜப்பான் இராணுவம் தாய்வானின் உதவிக்கு வரும் என்று கூறியதாலும் சீனா விசனம் கொண்டமை புதிய பயிற்சிக்கு காரணம் ஆகலாம்.

சீனா தாய்வான் மீது தாக்குதல் செய்யாவிடினும் இவ்வகை பயிற்சிகள் தாய்வானுக்கு பலத்த செலவையும், மனநிலை பாதிப்பையும் ஏற்படுத்தும். இது வெறும் பயிற்சி என்று தாய்வான் வேடிக்கை பார்க்க முடியாது. சீனாவின் எல்லா நகர்வுக்கும் தாய்வான் பதில் நகர்வுகள் செய்தல் அவசியம். சிறிய பொருளாதாரத்தை கொண்ட தாய்வானுக்கு இது பெரும் செலவாகும். அத்துடன் பயிற்சி காலங்களில் தாய்வானை சுற்றி விமான மற்றும் கப்பல் போக்குவரத்துகள் பெருமளவில் தடைப்படும்.