யாருக்கு சொல்லியழ 12: வடக்கே உதிக்கும் சூரியன்?

யாருக்கு சொல்லியழ 12: வடக்கே உதிக்கும் சூரியன்?

(இளவழகன், 2021-10-11)

2021ம் ஆண்டுக்கான நவராத்திரி தின கணிப்பு சில கனடிய இந்துக்களுக்கு/சைவர்களுக்கு சூரியன் வடக்கே உதிக்க ஆரம்பித்து உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது.

இவர்களின் கணிப்பின்படி 2021ம் ஆண்டுக்கான நவராத்திரி பூசையின் முதலாம் தினம் கனடா நேரப்படி அக்டோபர் மாதம் 6ம் திகதி அமைத்துள்ளது. ஆனால் இலங்கையில் அது இலங்கையில் நேரப்படி அக்டோபர் மாதம் 7ம் திகதியாக கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இலங்கையிலும், கனடாவிலும் ஏறக்குறைய ஒரே காலத்தில் முதலாம் நவராத்திரி தினம் ஆரம்பிக்கிறது.

ஆனால் நவராத்திரியில் ‘இரவு’ என்ற பதம் உள்ளதால் இந்த நிகழ்வு, சூரியனின் நிலைக்கு ஏற்ப, பூமியின் மேற்பரப்பை கணிப்பில் கொண்டதாக கருதலாம். சூரியனின் நிலைக்கு ஏற்ப பூமியின் மேற்பரப்புக்கே இரவு, காலை, பகல், மாலை என்றெல்லாம் உண்டு. நவராத்திரி வழிபாடு வடக்கே இருந்து தெற்கு வந்திருந்தால், வடக்கின் கணிப்புகள் தெற்கின் (சைவத்தின்/தமிழின்) கணிப்புகளுக்கு முரணாக அமைய இடமுண்டு. (நவராத்திரிக்கு தமிழ் சொல் உண்டோ? நவ என்பது ஆரிய சொல், Nov என்ற ஐரோப்பிய சொல்லின் சகோதரம்)

தெற்கே கொண்டாடப்படும் சில நிகழ்வுகள் பூமியின் மேற்பரப்பை கருத்தில் கொள்ளவில்லை. உதாரணமாக தமிழ் புதுவருடம் பூமியை மையத்தையே கருத்தில் கொள்கிறது. பூமி, குறிப்பாக பூமியின் மையம்,  தனது ஓடுபாதையில் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்து மீண்டும் அந்த புள்ளிக்கு வர எடுக்கும் காலமே தமிழில் ஒரு ஆண்டு. இந்த தமிழ் ஆண்டு கணிப்பு தற்கால விஞ்ஞானத்திற்கு முந்திய உரமான விஞ்ஞானம்.

தமிழ் புதுவருடத்துக்கும், சைவ நிகழ்வுகளுக்கும் தொடர் இல்லை என்று எவராவது கூற முனைந்தால், தற்கால ஆலய கணிப்புகள் மேலும் கலங்கிப்போகும்.

மேற்படி கனடிய கணிப்பு பூமியின் மையத்தை கருத்தில் கொண்டிருந்தால், நவராத்திரியில் உள்ள ‘ராத்திரி’க்கு அர்த்தமில்லை. மாறாக இக்கணிப்பு பூமியின் மேற்பரப்பை கருத்தில் கொண்டிருந்தால் இவர்களுக்கு சூரியன் வடக்கே உதித்து இருக்கும்.

தமிழ், சைவ மற்றும் இந்து நிகழ்வுகள் பின்னிப்பிணைந்து உள்ளதாலும், தற்போதைய பூசாரிகள் உலகம் எங்கும் பரந்து நாட்டுக்கேற்ற பாட்டு பாட ஆரம்பித்ததாலும் அவர்கள் கூறுவதற்கு எல்லாம் எம் அடியார்கள் அரோகரா போடுகிறார்களோ?

இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?