ரம்ப் கட்டளையிட்டாலும் சீனாவை அறிவிப்பின்றி தாக்கோம்

ரம்ப் கட்டளையிட்டாலும் சீனாவை அறிவிப்பின்றி தாக்கோம்

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சியில் இருந்த காலத்தில், அவர் சீனாவை தாக்கும்படி கட்டளை இட்டாலும் அமெரிக்க இராணுவம் அவ்வாறு சீனாவை முன்னறிவிப்பு இன்றி தாக்காது என்று அமெரிக்க முப்படை தலைவர் ஜெனரல் Mark Milley சீன படைகளுக்கு இரண்டு தடவைகள் உறுதி கூறியுள்ளார்.

இந்த செய்தி முதலில் Bob Woodward மற்றும் Robert Costa எழுதிய Peril என்ற நூலில் வெளிவந்திருந்தாலும், இன்று புதன்கிழமை பென்ரகன் (Pentagon) வெளியிட்ட அறிக்கை ஒன்று முப்படை தளபதி சீனாவுக்கு வழங்கிய உறுதி மொழியை உண்மை என்று ஏற்றுக்கொண்டுள்ளது.

Milley முதலில் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதமும் (அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு 4 தினங்கள் முன்), பின்னர் 2021ம் ஆண்டு ஜனவரி மாதமும் (வெள்ளை மாளிகை கலவரத்துக்கு பின்) சீனா இராணுவ தலைவர் ஜெனரல் Li Zuocheng உடன் தொடர்பு கொண்டு, ரம்ப் சீனாவை அறிவிப்பு இன்றி தாக்க கட்டளை இட்டாலும் அமெரிக்க இராணுவம் அவ்வாறு செய்யாது என்று உறுதி கூறியுள்ளார். அத்துடன் தனக்கு கீழே உள்ள இராணுவ அதிகாரிகளையும் தனக்கு அறிவிக்காது சீனா மீது தாக்குதல் எதையும் செய்யவேண்டாம் என்று Milley கேட்டுள்ளார்.

2018ம் ஆண்டே ரம்ப் முப்படை தளபதியாக ஜெனரல் Milley யை பதவியில் அமர்த்தி இருந்தார்.

இச்செய்தி வெளிவந்தபின், Milley அவ்வாறு செய்திருந்தால் அது துரோகம் என்றுள்ளார் முன்னாள் சனாதிபதி ரம்ப்.