$1 டிரில்லியனை தாண்டிய சீனாவின் Surplus

$1 டிரில்லியனை தாண்டிய சீனாவின் Surplus

சீனாவின் இந்த ஆண்டுக்கான surplus (மொத்த இறக்குமதிக்கு மேலான ஏற்றுமதி டாலர் பெறுமதி) வரலாற்றில் முதல் தடவையாக $1 டிரில்லியனை ($1,080 பில்லியன்) தாண்டி உள்ளது. சீன பொருட்கள் மீதான அமெரிக்க சனாதிபதி ரம்பின் கடுமையான இறக்குமதி வரிகளுக்கும் மத்தியில் சீன ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.

இந்த $1.08 பில்லியன் surplus நவம்பர் வரையான முதல் 11 மதங்களின் தொகை மட்டுமே. ஆண்டு இறுதியில், டிசம்பர் மாத தொகையுடன் கூடிய, surplus மேலும் அதிகரிக்கும். 2024ம் ஆண்டின் (12 மாதங்களுக்குமான) மொத்த surplus $992 பில்லியன் மட்டுமே.

2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் மட்டும் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் சீனாவின் ஏற்றுமதி 5.9% ஆல் ($330.3 பில்லியனால்) அதிகரித்து உள்ளது. அதேவேளை இறக்குமதி 1.9% ஆல் ($218.6 பில்லியனால்) மட்டுமே அதிகரித்து உள்ளது. அதாவது நவம்பர் surplus மட்டும் $111.7 பில்லியனால் அதிகரித்து உள்ளது.

ரம்பின் வரிகள் காரணமாக சீனாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இந்த ஆண்டு 29% ஆல் குறைந்து உள்ளது. ஆனாலும் சீனா தனது சந்தையை அமெரிக்காவுக்கு அப்பால் வெகுவாக பரப்பியதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சீனாவின் பொருளாதாரம் தற்போது இல்லை என்பது புலனாகிறது.

சீனாவுக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை இழப்பது மேற்கு நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு பெரும் தலையிடியாக உள்ளது. இந்த இழப்பை குறைக்க ஐரோப்பிய நாடுகளும் சீனாவுடன் பேச்சுக்களை செய்கின்றன. ஆனாலும் சீனாவின் கடந்த 30 ஆண்டுகளாக கட்டி எழுப்பிய பலமான உற்பத்தியை இந்தியா உட்பட வேறு எந்த நாடும் முற்றாக பிரதி செய்ய முடியவில்லை.