அமெரிக்க சனாதிபதி ரம்பும், சீன சனாதிபதி சீயும் முன்னர் அறிவித்தபடி வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் சுமார் 2 மணிநேரம் உரையாடி இருந்தனர். ஆனாலும் ரம்ப் எதிர்பார்த்தபடி அவர்கள் இடையே இணக்கங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சீயுடனான வெள்ளிக்கிழமை பேச்சு அமெரிக்காவில் சீனாவின் TikTok சேவை உரிமையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க இணக்கம் ஏற்படும் என்று ரம்ப் பல தடவைகள் கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு இணக்கம் ஏற்படவில்லை.

சீ TikTok சேவையின் அமெரிக்க பிரிவை ரம்ப் விரும்புவதுபோல் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க தயார் என்றாலும், அதை மொத்த அமெரிக்க-சீன வர்த்தக உடன்படிக்கையின் ஒரு அங்கமாகவே கொண்டிருக்க விரும்புகிறார்.

அண்மையில் ரம்புக்கும் ரஷ்யாவின் பூட்டினுக்கும் இடையில் அலாஸ்காவில்  இடம்பெற்ற உரையாடலும் ரம்புக்கு பயன் எதையும் வழங்கியிருக்கவில்லை.

உலக அளவில் 1.5 பில்லியன் மக்கள் TikTok பாவனையாளராக உள்ளனர். அதில் 170 மில்லியன் பேர் அமெரிக்கர். TikTok சேவை சீனாவில் கிடையாது.