137 யுக்கிரைன் படைகள் பலி, சில பகுதிகள் ரஷ்ய படை வசம்

137 யுக்கிரைன் படைகள் பலி, சில பகுதிகள் ரஷ்ய படை வசம்

ரஷ்யாவின் யுக்கிரைன் மீதான படையெடுப்புக்கு இதுவரை குறைந்தது 137 யுக்கிரைன் படையினர் பலியாகி உள்ளதாக யுக்கிரைன் சனாதிபதி செலென்ஸ்கி (Zelensky) கூறியுள்ளார். மேலும் 316 யுக்கிரைன் படைகள் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் சில யுக்கிரைன் பகுதிகளில் ரஷ்ய படைகள் தற்போது நிலை கொண்டுள்ளன.

போராட ஆண்கள் தேவை என்றபடியால் யுக்கிரைன் சனாதிபதி 18 முதல் 60 வயதான ஆண்கள் யுக்கிரைனை விட்டு வெளியேறுவதை தடை செய்துள்ளார். அங்கு ஏற்கனவே நடைமுறை செய்யப்பட்டுள்ள martial law ஆண்கள் வெளியேறுவதை தடுக்க உதவி உள்ளது.

யுக்கிரைன் தலைநகர் கீவ்க்கு (Kyiv) வடமேற்கே சுமார் 25 km தூரத்தில் உள்ள விமானப்படை தளம் ஒன்றை ரஷ்ய படையினர் கைப்பற்றி உள்ளனர். சேர்னோபல் (Chernobyl) என்ற அணுமின் நிலையத்தையும் ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. 1986ம் ஆண்டு இங்கு அணுமின் உலை வெடித்து இருந்தது. இதுவே இதுவரை இடம்பெற்ற மிகப்பெரிய அணு உலை வெடிப்பாகும்.

ரஷ்யா இதுவரை குறைந்தது 160 ஏவுகணைகளை யுக்கிரைன் மீது ஏவி உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

குறைந்தது 100,000 யுக்கிரைன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. சிலர் நிலக்கீழ் ரயில் நிலையங்களில் தங்கி உள்ளனர்.