1965 இந்தோனேசிய படுகொலை, பிரித்தானியாவுக்கு அழுத்தம்

1965 இந்தோனேசிய படுகொலை, பிரித்தானியாவுக்கு அழுத்தம்

1965 முதல் 1966 வரை இந்தோனேசியாவில் இடதுசாரிகளையும், கம்யூனிஸ்ட்களையும் அந்த நாட்டு இராணுவம் கலவரம் என்ற போர்வையில் படுகொலை செய்து இருந்தது. இந்த படுகொலைகளுக்கு சுமார் 2 முதல் 3 மில்லியன் பேர் பலியாகியதாக கணிப்புகள் கூறுகின்றன. Cold War காலத்தில் இடம்பெற்ற இந்த படுகொலைகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகள் உதவியும் ஊக்கமும் வழங்கி இருந்தன. இவர்களே சர்வாதிகாரி Suharto வை ஆட்சியில் அமர்த்தினர்.

தற்போது International People’s Tribunal (IPT) for 1965 என்ற அமைப்பு இந்த படுகொலையின் உண்மைகளை முழுமையாக ஆவணப்படுத்த முனைந்து வருகிறது. அமெரிக்கா, பிரித்தானியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகள் இந்த படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தமையை ஆவணங்கள் மூலம் IPT காட்டி இருந்தது.

பிரித்தானியாவின் Foreign Office உள்ளே இயங்கிய Information Research Department என்ற இரகசிய அமைப்பு இந்தோனோசிய படுகொலைகளுக்கு உதவியதாக கூறப்படுகிறது. இந்த இரகசிய அமைப்பு படுகொலைகளுக்கு உடந்தையாக பெருமளவு பின் பரப்புரை வெளியீடுகளை தயாரித்து உள்ளமையும் தற்போது தெரிய வந்துள்ளது.

2017ம் ஆண்டு அமெரிக்காவின் National Security Archive பகிரங்கப்படுத்திய (declassified) ஆவணங்களும் அமெரிக்கா படுகொலைக்கு உடந்தையாக இருந்தமையை காட்டி உள்ளன. இந்த ஆவணங்களில் 1964 முதல் 1968 வரை அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதங்கள் போன்றனவும் உண்டு. இவை அனைத்தும் பின் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி Suharto வுக்கு ஆதரவாக அமெரிக்கா இயங்கியதை காட்டி உள்ளன.

Indonesia Communist Party (PKI) என்ற இந்தோனேசிய இடதுசாரி கட்சிக்கு சீனா உதவுகிறது என்று பிரித்தானியாவும், அமெரிக்காவும் பரப்புரை செய்திருந்தாலும் அதில் எந்தவித உண்மையும் இல்லை என்பது அப்போதே மேற்குக்கு தெரியும். தமக்கு சாதகமான சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்தவே இந்த பொய் பரப்புரை பயன்படுத்தப்பட்டது.