4வது வருடமாக வாகன விற்பனையில் சீனா முதலிடம்

பல காலம் அமெரிக்காவிலேயே அதிகூடிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்திருந்தது. ஆனால் கடந்த 4 வருடங்களாக அதிகூடிய வாகனங்கள் சீனாவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 19.3 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. The China Association of Automobile இன் கணிப்பின்படி சீனாவின் 2012 ஆம் வருடத்தின் கார் விற்பனை 2011 வருட விற்பனையைவிட 4.3% அதிகம். அதேவேளை தற்போது உலக வாகன விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டுக்கான வாகன விற்பனை 14.5 மில்லியன் மட்டுமே.

சீனாவின் உள்ளூர் தயாரிப்பாளர்களான Geely தமது 2012 ஆம் வருடத்துக்கான விற்பனை 2011 ஆம் வருடத்தைவிட 24% ஆல் அதிகம் என கூறியுள்ளது. அத்துடன் இவர்களின் 2013 ஆம் வருடத்துக்கான விற்பனை மேலும் 16% ஆல்  அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.

அண்மை காலங்களில் சீனவிக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமைகள் காரணமாக (Diaoyudao அல்லது Senkaku தீவு விவகாரம்) சீனாவில் ஜப்பானிய எதிர்ப்பு அதிகரித்து, அதன் விளைவாக அங்கு ஜப்பானிய வாகன விற்பனை 9.4% ஆல் குறைந்துள்ளது. அதாவது சுமார் 2.5 மில்லியன் ஜப்பானிய வாகனங்கள் மட்டுமே அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.