தனது 92% ஆயுதங்களை சீனா தானே தயாரிப்பு, இந்தியா 16%

தனது 92% ஆயுதங்களை சீனா தானே தயாரிப்பு, இந்தியா 16%

Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற சுவீடன் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கணிப்புகளின்படி சீனா தனது ஆயுதங்களின் 92% ஆயுதங்களை தானே உற்பத்தி செய்கிறது. இது அமெரிக்காவின் சுய உற்பத்தி வீதத்திலும் அதிகம். இந்த கணிப்புகள் 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான தகவல்களை மட்டுமே உள்ளடக்கின.

முன்னர் சீனா தனது யுத்த விமானங்களுக்கு தேவையான இயந்திரங்களை (engine) ரஷ்யாவிடம் இருந்தே கொள்வனவு செய்திருந்தது. ஆனால் அது தனது புதிய J-10, J-11, J-20 வகை யுத்த விமானங்களுக்கும், Y-20 இராணுவ நகர்தல் விமானங்களுக்குமான இயந்திரங்களை தற்போது தானே தயாரிக்கிறது.

உலக அளவிலான யுத்தம் ஒன்று வந்தால் கைவசம் இருக்கும் ஆயுதங்கள் வேகமாக குறைய அல்லது அழிய அவற்றை மீண்டும் நிரப்ப வேறு நாடுகளில் இருந்து ஆயுதங்களை எதிர்பார்ப்பது ஆபத்து. ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடுகளின் கொள்கைகள் மாறலாம், அல்லது அவை எதிரியின் கையில் விழலாம், போக்குவரத்துக்கு தடைப்படலாம்.

அஸ்ரேலியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் மேற்படி கணிப்புக்கு உட்பட்டு இருந்தன.

ஆசியாவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஜப்பான் 74% ஆயுதத்தை தானே உற்பத்தி செய்கிறது. மிகுதியை பெருமளவில் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளிடம் இருந்து கொள்வனவு செய்கிறது.

தென்கொரியா 3ம் இடத்தில் உள்ளது.

ஆசியாவில் 4ம் இடத்தில் இருக்கும் இந்தியா 16% ஆயுதத்தை மட்டுமே தான் உற்பத்தி செய்கிறது. மிகுதி 84% ஆயுதங்கள் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றன.

ஆயுத சுய உற்பத்தியில் தாய்வான் 5ம் இடத்திலும், அஸ்ரேலியா 6ம் இடத்திலும், சிங்கப்பூர் 7ம் இடத்திலும், பாகிஸ்தான் 8ம் இடத்திலும், இந்தோனேசியா 9ம் இடத்திலும், மலேசியா 10ம் இடத்திலும், தாய்லாந்து 11ம் இடத்திலும் உள்ளன.

உலக அளவில் சீனாவுடன் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தமக்கு தேவையான ஆயுதங்களை கணிசமான அளவில் தாமே தயாரிக்கின்றன.