தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும் கனடிய வீட்டு விலை

தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும் கனடிய வீட்டு விலை

கனடாவில், குறிப்பாக ரொரண்ரோ (Toronto) நகர் பகுதியில் வீடுகளின் விலைகள் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகின்றன. 2024ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஏப்ரல் மாத வீடு விற்பனை 23.3% ஆல் வீழ்ச்சி அடைந்து, வீடுகளின் சராசரி விலையும் ஒரு மில்லியனுக்கு டாலருக்கு குறைவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்பகுதியில் 7,302 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5,601 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 

2020ம் ஆண்டு கரோனா காரணமாக வீடு விற்பனை இங்கு மிக குறைவாக இருந்தது. அந்த ஆண்டை தவிர்த்து கணித்தால், இந்த ஏப்ரல் மாத விற்பனை 1997ம் ஆண்டு பின்னர் இடம்பெற்ற அதி குறைந்த விற்பனையாகும்.

அதேவேளை மேலும் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18,836 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8.1% அதிகரிப்பு.

ரொரண்ரோவின் புறநகர் பகுதிகள் அடங்கிய ரொரண்ரோ பெரும்பகுதி வீடுகளின் சராசரி விலையும் 4.1% ஆல் வீழ்ச்சி அடைந்து C$1,107,463 ஆகியுள்ளது. புறநகர் பகுதிகளை விடுத்தது ரொரண்ரோ நகரை மட்டும் கணிப்பிட்டால், இங்கு சராசரி வீட்டு விலை C$985,400 ஆக உள்ளது. மிக நீண்ட காலத்தின் பின் இது முதல் முறையாக ஒரு மில்லியனுக்கு கீழாக உள்ளது.

ரொரண்ரோ Condo களின் விற்பனையே அதிகம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இப்பகுதி Condo விற்பனை 30.4% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் வீடுகள் விற்பனைக்கு வருவதால் வீடுகளின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது.