இஸ்ரேலை கைவிடுகிறாரா ரம்ப்?

இஸ்ரேலை கைவிடுகிறாரா ரம்ப்?

அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. இவர் தனது நலனுக்காக எவரையும் கைவிடுவார், எவருடனும் நட்பு கொள்வார்.

நீண்ட காலமாக இஸ்ரேலின் நண்பராக இருந்த ரம்ப் தற்போது இஸ்ரேலை கைவிடுகிறாரா என்று சந்தேகிக்க வைக்கிறது அவரின் அண்மைக்கால நகர்வுகள்.

ரம்ப் 2016ம் ஆண்டில் இடம்பெற்ற தனது முதல் ஆட்சியில் அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு நகர்த்தி, ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, வேறும் பல இஸ்ரேலுக்கு ஆதரவான நகர்வுகளை செய்திருந்தார்.

ஆனால் தற்போது ரம்பின் பல நகர்வுகள் இஸ்ரேலை வியக்க வைத்துள்ளன:

1) மார்ச் மாதம் ரம்ப் பலஸ்தீன ஆயுத குழுவான ஹமாசுடன் ரம்ப் இரகசியமாக நேரடியாக பேச்சுவார்த்தை செய்துள்ளார். இஸ்ரேலை புறக்கணித்து இவ்வாறு நேரடியாக பேசியதை இஸ்ரேல் அறவே விரும்பவில்லை.

2) ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீதான இறக்குமதி வரியை நீக்க கேட்டு இஸ்ரேல் பிரதமர் வெள்ளை மாளிகை சென்று இருந்தார். ஆனால் ரம்ப் இஸ்ரேல் விரும்பியபடி இறக்குமதி வரியை நீக்கவில்லை.

3) இஸ்ரேலின் பங்கு இன்றி ஈரானுடன் ரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை செய்துள்ளார். அதையும் இஸ்ரேல் விரும்பவில்லை. இந்த பேச்சு முதலில் ஓமானில் நிகழ்ந்தது.

4) அடுத்த கிழமை ரம்ப் சிலவேளை மத்திய கிழக்கிற்கு செல்லக்கூடும், ஆனால் இஸ்ரேல் அழைக்கப்படவில்லை.

5) மே மாதம் 6ம் திகதி இஸ்ரேல் இன்றி ரம்ப் நேரடியாக யெமென் ஆயுத குழுவான Houthi யுடன் சமாதான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அமெரிக்கா Houthi யை தாக்காது, Houthi அமெரிக்க கப்பல்களை தாக்காது. ஆனால் Houthi இஸ்ரேலை தொடர்ந்தும் தாக்கலாம். இதை இஸ்ரேல் எதிர்பார்த்து இருக்கவில்லை.

6) தற்போது காசாவுக்கான உணவு, மருந்து போன்றவற்றை அமெரிக்கா வழங்க முன்வருகிறது. இது இஸ்ரேலின் பிடியில் இருந்து காசாவை விடுவிக்கும்.

7) கடந்த வெள்ளி ரம்பின் பாதுகாப்பு செயலாளர் தனது இஸ்ரேல் பயணத்தை கைவிட்டு உள்ளார்.