இஸ்ரேல் ஈரான் மீது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த தாக்குதல்கள் சுமார் ஒரு கிழமையாக இரு தரப்பிலும் பாரிய இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் யுத்தத்தை தனது வெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் ரம்பின் உதவியை நாடுகிறது.
குறிப்பாக மலைகளை குடைந்து நிலத்துக்கு கீழ் ஈரான் அமைத்துள்ள அணுமின் உலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேலால் முடியவில்லை. ஆனால் அமெரிக்காவிடம் உள்ள GBU-57 என்ற 30,000 இறாத்தல் எடை கொண்ட 20 அடி நீள குண்டு சுமார் 200 அடி தடிப்பான சீமெந்து சுவரை தாக்கி அழிக்க வல்லது.
அத்துடன் GBU-57 குண்டை காவக்கூடிய B-2 வகை குண்டு வீச்சு விமானமும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இஸ்ரேல் அமெரிக்காவிடம் நாடுவது இந்த உதவியையே.
அமெரிக்கா இந்த தாக்குதலை செய்தால் அது அமெரிக்க-ஈரான் நேரடி யுத்தமாகும். அதற்கு ரம்பின் சில ஆதரவாளரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சதாமை அழிக்க ஈராகுள் சென்ற அமெரிக்க இராணுவம் அடைந்த அழிவுகளை மீண்டும் அடைய சில அமெரிக்கர் விரும்பவில்லை.
அதேநேரம் அமெரிக்கா கட்டாரில் உள்ள தனது சில யுத்த விமானங்களையும், பஹ்ரைனில் உள்ள தனது யுத்த கப்பல்கள் சிலவற்றையும் வேறு இடங்களுக்கு பாதுகாப்பு கருதி நகர்த்தி உள்ளது.