ஈரானின் அணு உலைகள் மீது நேற்று அமெரிக்கா செய்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா 125 க்கும் அதிகமான விமானங்களை பயன்படுத்தி உள்ளது. இவற்றில் B-2 Spirit வகை குண்டு வீச்சு விமானங்கள், வானில் எரிபொருள் நிரப்பும் பாரிய விமானங்கள், வேவு பார்க்கும் விமானங்கள், யுத்த விமானங்கள் ஆகியனவும் அடங்கும்.
முதலில் சில B-2 விமானங்கள் அமெரிக்க Missouri மாநிலத்தில் இருந்து மேற்கே பசுபிக் கடலை நோக்கி பறந்தன. இவை Guam தீவில் உள்ள அமெரிக்க தளத்தை அடைந்தன. ஆனால் இவை குண்டு வீச்சில் பங்கு கொள்ளாத திசை திருப்பும் (decoy) விமானங்களே.
அதேநேரம் தாக்குதலுக்கான B-2 விமானங்கள் GBU-57 குண்டுகளுடன் கிழக்கே அத்திலாந்திக் சமுத்திரத்தை நோக்கி பறந்தன. இவற்றின் பயணம் மிக நீண்ட தூரம் ஆகையால் இவற்றுக்கு சில இடங்களில் வானத்தில் வைத்தே எரிபொருள் நிரப்பப்பட்டன.
இவை மத்திய கிழக்கை அடைந்ததும் இவற்றுக்கு பாதுகாப்பு வழங்க இப்பகுதியில் நிலைகொண்டிருந்த பல அமெரிக்கா யுத்த விமானங்கள் இவற்றுடன் இணைந்தன. B-2 வகை விமானங்கள் வெறும் குண்டு வீச்சு விமானங்கள் மட்டுமே, இவற்றால் சண்டையிட முடியாது.
தாக்குதலுக்கு முன் அரபு கடலில் இருந்த அமெரிக்க நீர்முழ்கிகள் 20 க்கும் மேற்பட்ட Tomahawk வகை cruise ஏவுகணைகளை ஈரானின் Isfahan அணு உலை மீது ஏவின.
சனி அதிகாலை 2:00 மணியளவில் முன் சென்ற B-2 தான் காவி சென்ற GBU-57 குண்டை வீசியது. Fordo மற்றும் Natanz அணு உலைகள் மீது மொத்தம் 14 இவ்வகை குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த குண்டு வீச்சுகள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தின என்பது இதுவரை அறியப்படவில்லை.
1989ம் ஆண்டு சேவைக்கு வந்த B-2 விமானங்கள் ஒவ்வொன்றும் சுமார் $2.13 பில்லியன் செலவில் (2024ம் ஆண்டில் $4.17 பில்லியன்) தயாரிக்கப்பட்டன. முதலில் 132 விமானங்கள் தயாரிக்கப்பட இருந்தாலும் சோவியத் உடைந்ததன் காரணமாகவும், அதிகரித்த செலவு காரணமாகவும் மொத்தம் 21 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.