(இளவழகன், 2025-08-12)
கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய தமிழர் புட்டு குழலையும், இடியாப்ப உரலையும் மட்டும் கண்டுபிடித்து இருக்கவில்லை. தற்போது ‘ஒற்றை கண் மதவு’ ஒன்றையும் கண்டுபிடித்து உள்ளார்கள். உலகில் வேறு எங்கும் இல்லாத ‘ஒற்றை கண் மதவு’ ஒன்று 2025-08-09 அன்று இலங்கையின் மூளை என்று கூறப்படும் வடமராட்சியின் கரவெட்டி பகுதியில், கொடிகாமம் வீதிக்கு குறுக்கே, ஞானாசாரியார் கல்லூரி வீதி சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த ஒற்றை கண் மதவுள் இலைமறை காயாக மறைந்திருக்கும் வியத்தகு நுட்பம் என்னவென்பதை இதை அமைத்த மேன்மைக்குரிய அரச அதிகாரிகளே கூறவேண்டும்.
பழைய தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒரு குழந்தை வறுமை பாத்திரமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் கேட்கும் அவரின் வீட்டு கூரையில் ஏன் ஓட்டைகள் உள்ளன என்று. நாகேஷ் கூறுவார் அது மழை பெய்யும்போது மழை நீர் வீட்டின் உள்ளே வருவதற்கு என்று. அப்படியானால் வீட்டு சுவரில் ஏன் ஓட்டைகள் உள்ளன என்று அந்த குழந்தை கேட்க நாகேஷ் கூறுவார் அது உள்ளே வந்த மழை நீர் வெளியே போகவென்று. அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு நகைசுவை நடிகனுக்கு இருந்த அறிவுகூட இன்றைய தமிழ் அரச அதிகாரிகளுக்கு இல்லையா?
எம்மூர் மதவுகள் எல்லாம் பெரும்பாலும் வெள்ளையர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. வடமராட்சியின் அல்வாய், வதிரி போன்ற இடங்களின் மழை வெள்ளம், இவ்விடங்களுக்கும் கடலுக்கும் இடையில் உள்ள நில மட்டம் உயரமானதால், சுமார் ஓரிரு km தொலைவில் உள்ள கடலை அடையாது என்பதை அறிந்த வெள்ளையர் இவ்விட நீர் கடலுக்கு பாய நீண்டதொரு வாய்க்காலை அமைத்தனர். அந்த வாய்க்கால் வதிரியில் இருந்து மாலிசந்தி வந்து, மாலிசந்தி பிள்ளையார் கோவில் அருகே பருத்தித்துறை வீதியோரம் தெற்கே பாய்ந்து, அத்தாய்/ஒந்திராய் வயலை அடைந்து, ஞாசாரியார் கல்லூரி முன்னே சென்று, நுணுவில் வயலை அடைந்து, அங்கிருந்து பெரிய பாலம் ஒன்று ஊடு சென்று கப்புதூவை அடைந்து பின் வல்லை பாலம், தொண்டைமானாறு பாலம் ஊடாக கடலை அடைகிறது. இது சுமார் 20 km நீள பயணம்.
இந்த பெரு வாய்க்கால் இது செல்லும் வழியே உள்ள கிராமங்களின் மிகையான வெள்ளங்களையும் கூடவே கடலுக்கு எடுத்து செல்கிறது. அவ்வாறு கிராம வெள்ளங்கள் மேற்படி பெரு வாக்காலை அடைய வசதியாக வீதியோரங்களில் சிறு வாய்க்கால்களும், வெள்ளம் வீதியை கடக்க ஆங்காங்கே மதவுகளும் வெள்ளையனாலேயே அமைக்கப்பட்டன. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே வெள்ளையன் வெள்ளம் வழிந்தோட (drainage) வாய்க்கால், பாலம் அமைத்து பின்னரே வீதி அமைப்பான்.
இந்த வாய்க்கால்களையும், மதவுகளையும் யுத்தத்துக்கு முன் நகர சபைகள் ஆண்டு தோறும் மழைக்கு முன் செப்பனிடும். தற்போது இந்த வாய்க்கால்கள், மதவுகள் மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன. (இந்த தமிழ் தேசிய வாய்க்கால் அழிப்புக்கு சிங்கள தேசியம் காரணம் அல்ல.)
அவ்வகை மதவு ஒன்றே ஞானாசாரியார் வீதி சந்தியில் இருந்தது. இந்த மதவு இப்பகுதி வெள்ளத்தை அத்துளு வயலுக்கு எடுத்து, பின் கிழக்கே உள்ள இன்னோர் வாய்க்கால் மூலம் வெள்ளம் நுணுவில் வயல் சென்று பெரு வாய்க்கால் நீரோட்டத்துடன் இணைகிறது.
ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி இங்கு திடீரென வந்த அரச அதிகாரிகள் மதவின் தெற்கு புருவத்தை உடைத்து, குழாயின் நீர் வெளியேறும் கண்ணையும் சீமெந்தால் மூடி சென்றுள்ளனர். மதவின் வடக்கு பக்க கண், நீர் உள்ளே செல்லும் குழாயின் அடுத்த பக்க கண், தற்போதும் மூடப்படாமல் உள்ளது. வீதிக்கு கீழான மதவும் உடைக்கப்படவில்லை (படம் 1). அவசர அவசரமாக மதவின் ஒரு பக்கத்தை மட்டும் அடைத்தமையில் புதைந்திருக்கும் அறிவியல் என்னவோ? இந்த உடைப்பை அனுமதித்த அரச கல்விமான் அவசர உடைப்பின் மகிமையை தெரிவிப்பாரா?

அரசன் அன்று அறுக்க, தெய்வம் நின்று அறுக்க, இயற்கை இரண்டாம் நாள் அறுத்தது. ஆகஸ்ட் 11ம் திகதி காலை திடீரென பொழிந்த பெருமழை ஒன்று இவ்விடத்தில் carpet வீதியை மூடி பெரும் நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கியது (படம் 2). இது சில மணிநேர மழையால் ஏற்பட்ட தேக்கமே. இதே மழை சில தினங்கள் பெய்திருந்தால் என்னவாகும்? வெள்ளத்துள் மாண்டுவிட்டோம் என்று வெளி நாடுகளிடம் பேணி குலுக்க ஒரு சந்தர்ப்பத்தை எங்கள் கல்விமான்களுக்கு வழங்கி இருக்கும் என்பது உறுதி.

அண்மைக்காலங்களில் இங்கே பல வெள்ள வாய்க்கால்கள் ஒழுங்கைகளாகவும், வீதிகளாகவும் மாற்றப்படுகின்றன.
நெல்லியடி சந்திக்கு அருகில், கொடிகாமம் வீதியில் ஒரு 90 பாகை முடக்கு உண்டு. அதிலும் யுத்தத்துக்கு முன் மூலைக்கு மூலையான திசையில் ஒரு பாலம் இருந்தது. உள் நீரை வெளியே தள்ளிய அது தற்போது இருந்த இடம் தெரியாமலே அழிந்து விட்டது. அதனால் மழை காலங்களில் தற்போது அந்த முடக்கில், NSB வங்கிக்கு முன்னால், அழுக்கு நீர் நிறைந்த ஒரு நீர்த்தேக்கம் உருவாகும். அப்போது பாதசாரிகள் வாகனங்களுடன் கபடி விளையாடியே பாதுகாப்பாக கடப்பர்.
மழை காலங்களில் நெல்லியடி புதிய சந்தைக்கு முன்னாலும் இப்படி ஒரு நீர்த்தேக்கம் தற்போது மக்களை கபடி விளையாட வைக்கும்.
ஞானாசாரியார் சந்திக்கு மேற்கே உள்ள அரசடி சந்தியில், வீதிக்கு தெற்கே வெள்ளையன் அமைத்த இன்னோர் வாய்க்கால் அப்பகுதி வெள்ள நீரை அத்துளு வயலுக்கு எடுத்து செல்கிறது. ஆனால் வீதிக்கு வடக்கே தேங்கும் நீர் வீதியை கடந்து வாய்க்காலை அடைய வழியில்லை. அதனால் அதிலும் ஒரு நீர்த்தேக்கம் உருவாகும். பஸ்சுக்கு காத்திருப்போர் வாகனங்கள் வரும்போது தூண்களுக்கு பின்னால் ஒளிந்து மறைந்து ‘கள்ளன் போலீஸ்’ விளையாடி வாகன சக்கரங்கள் வீசும் அழுக்கான நீரில் இருந்து தப்புவர்.
எங்களுக்கு இல்லாத அறிவா வெள்ளையனுக்கு உள்ளது?
எழுதுங்கள் வெள்ளையன் கல்லறையில்
அவன் பைத்தியக்காரன் என்று
பாடுங்கள் உங்கள் கல்லறையில்
நீங்கள் கல்விமான்கள் என்று
அழிவு எம்மை பற்றிக்கொண்டது
அது அதிகாரிகள் என்ற வடிவில் வந்தது
(முடிந்தால் அந்த அதிகாரிகளை அடையும் வரை இதை பகிருங்கள்)