ஐ.நாவில் அகதிகள் உரிமைகளை குறைக்க முனையும் ரம்ப் 

ஐ.நாவில் அகதிகள் உரிமைகளை குறைக்க முனையும் ரம்ப் 

அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஐ.நாவில் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ரம்பின் இந்த முயற்சி இந்த மாத இறுதியில் ஐ.நாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஐ.நாவில் அகதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பெருமளவில் அகதிகளான ஐரோப்பியரையும், யூதர்களையும் மனதில் கொண்டு வரையப்பட்டவை.

ஆனால் தற்போது இந்த உரிமைகளை பெரிதும் அனுபவிப்பவர்கள் ஆசிய, மத்திய கிழக்கு, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாட்டவரே. அதை ரம்ப் விரும்பவில்லை.

உதாரணமாக தற்போதைய அகதிகள் உரிமைப்படி ஒரு அகதி தான் விரும்பிய எந்த நாட்டிலும் அகதி நிலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ரம்பின் புதிய விதி அகதி முதலில் நுழையும் நாட்டில் மட்டுமே அகதி நிலைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும். 

அதாவது தற்போதைய விதிப்படி தற்போது இலங்கை அகதி ஒருவர் இந்தியா சென்று, அங்கிருந்து ஐரோப்பா சென்று, பின் கனடாவில் அகதி நிலைக்கு விண்ணப்பிக்கலாம். அனால் ரம்பின் புதிய விதியில் மேற்படி அகதி இந்தியாவில் மட்டுமே அகதி நிலைக்கு விண்ணப்பிக்க உரிமை இருக்கும்.

புதிய விதிப்படி அகதி நிலை தாற்காலிகமானதாகவும் இருக்கலாம். அதாவது வெளியேறிய நாட்டில் நிலைமை வழமைக்கு திரும்பினால், அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம். இலங்கையில் யுத்தம் சுமார் 40 ஆண்டுகள் இடம்பெற்றது. சுமார் 40 ஆண்டுகளின் பின், பிள்ளைகள், பேரர்கள் எல்லாம் பிறந்தபின் யாரை திருப்பி அனுப்புவது?