தென் அமெரிக்க நாடான வெனிசுஏலாவில் (Venezuela) தனது அனுமதியுடன் அமெரிக்காவின் CIA உளவுப்படை இயங்குவதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் புதன்கிழமை கூறியுள்ளார்.
பொதுவாக இவ்வகை தீர்மானம் அமெரிக்க காங்கிரசின் அனுமதி பெற்றே நடைமுறை செய்யப்படும். ஆனால் காங்கிரசின் Senate, House ஆகிய இரண்டும் ரம்பின் Republican கட்சி பெரும்பான்மையை கொண்டுள்ளதால் இரண்டு சபைகளும் கண்களை மூடி உள்ளன.
வெனிசுஏலாவில் இருந்து போதையை ஏற்றிவந்த சில வள்ளங்கள் நடுக்கடலில் வைத்து தாக்கி அழிக்கப்பட்டன என்று அமெரிக்கா கூறினாலும் அவற்றுக்கான விபரங்கள் எதுவும் சட்டப்படி சமர்பிக்கப்படவில்லை. அமெரிக்காவுக்கோ, உலகுக்கோ இந்த தாக்குதல்கள் நியாப்படுத்தப்படவில்லை.
வெனிசுஏலாவில் இயங்கும் CIA, அங்கு போதை கடத்துவோரையும், அகதிகளை கடத்துவோரையும் மட்டுமே குறிவைத்துள்ளது என்று ரம்ப் கூறினாலும், அங்கு ஒரு ஆட்சி கவிழ்ப்பை செய்ய ரம்ப் திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நீண்ட காலமாக வெனிசுஏலாவில் ஒரு அமெரிக்க எதிர்ப்பு இடதுசாரி ஆட்சியே உள்ளது. அதை அமெரிக்கா விருப்பவில்லை.