இலங்கை தமிழர் போல் வேகமாக அழியும் யூக்கிறேன் சனத்தொகை 

இலங்கை தமிழர் போல் வேகமாக அழியும் யூக்கிறேன் சனத்தொகை 

இந்தியா தனது தேவைக்காக உரு ஏற்றிவிட தன் கைக்கு அடங்காத யுத்தத்துக்கு சென்ற இலங்கை தமிழரின் சனத்தொகை இலங்கையில் வேகமாக அழிவது போல் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ஏற்றிய உருவால் ரஷ்யாவுடன் மோதும் யூக்கிறேனின் சனத்தொகையும் வேகமாக அழிந்து வருகிறது.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு முன் யூக்கிறேனில் சனத்தொகை 42 மில்லியன் ஆக இருந்தது. தற்போது அங்கு சனத்தொகை 36 மில்லியன் மட்டுமே. குறிப்பாக யூக்கிறேன் இழந்தது பிள்ளை பெறும் இள வயதினரை. 2051ம் ஆண்டு அளவில் யூக்கிறேன் சனத்தொகை 25 மில்லியன் ஆக குறையலாம் என்று கணிக்கப்படுகிறது.

யூக்கிறேன் யுத்தம் இன்று நிறுத்தப்பட்டாலும் இந்த சனத்தொகை அழிவு தொடரும். காரணங்கள்: 1) பெருமளவு பிள்ளை பெறும் வயது ஆண்கள் யுத்தத்தில் பலியாகி உள்ளமை, 2) மிகுதியில் பெருமளவு பிள்ளை பெறும் வயதினர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தமை. இவை இரண்டுமே இலங்கை தமிழ் சனத்தொகை அழியவும் காரணங்கள் ஆகின்றன.

சராசரியாக ஆண்டுக்கு 400 குழந்தைகளை பெறும் Hoshcha என்ற யூக்கிறேன் நகர வைத்தியசாலையில் 2024ம் ஆண்டு 164 குழந்தைகளும், இந்த ஆண்டு 139 குழந்தைகளும் மட்டுமே பிறந்து உள்ளனர். இவ்வகை இழப்பு யுத்தம் நின்று 15 ஆண்டுகளுக்கு பின்னரும் இலங்கை தமிழர் பகுதியிலும் நடைபெறுகிறது. வடக்கின் ஒரு ‘மதவடி’ முதல் ‘புளியடி’ வரையிலான கூப்பிடு தூர வீதியோர வீடுகளில் 2009ம் ஆண்டுக்கு பின் மரணமானார் தொகை 10 (இயற்கை மரணங்கள்). ஆனால் அதே காலத்தில் இத்தூரத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 0.

முன்னர் சுமார் 200 மாணவரை கொண்டிருந்த Sadove என்ற நகரத்து பாடசாலையில் மாணவர் தொகை 9 ஆக அந்த பாடசாலை இழுத்து மூடப்பட்டது. இதுவும் தமிழர் பகுதியில் நிகழ்கிறது. கப்புதூ போன்ற இடங்களில் பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன. மேலும் பாடசாலைகள் மூடப்படும்.

தற்போது இலங்கை தமிழரின் மேற்கு நாட்டு கோவில் திருவிழாக்களுக்கு வரும் சனத்தொகையின் சிறு பங்கே ஊர் கோவில்களின் திருவிழாக்களில் தெரிகிறது. அது மட்டுமன்றி ஊர் கோவில்களில் தெரிவது பெரும்பாலும் முதியோர். ஆனால் புலம்பெயர்ந்த நாட்டு கோவில்களில் குழந்தைகள் முதல் எல்லா வயதினரும் தாராளமாக உள்ளனர். யூக்கிரேனியர் நிலையும் இவ்வாறே அமைகிறது.