சீன விமான சேவைகள் சில ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus விமானங்கள் 145 ஐ கொள்வனவு செய்ய முன்வந்துள்ளன. சீனாவின் இந்த பெரிய Airbus கொள்வனவு அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய ஏமாற்றமாகும்.
வழமையாக சீனா அரை பங்கு விமானங்களை Airbus சிடம் இருந்தும், அரை பங்கு விமானங்களை அமெரிக்க Boeing கிடம் இருந்தும் கொள்வனவு செய்யும். ஆனால் இம்முறை அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனாவுடன் வரி மோதலில் ஈடுபடுவதே சீனா Boeing விமானங்கள் எதையும் கொள்வனவு செய்யாமைக்கான காரணம் என்று நம்பப்படுகிறது.
திங்கள் சில சீன விமான சேவைகள் 55 புதிய A320neo வகை விமானங்களை கொள்வனவு செய்ய அறிவித்து இருந்தன.
செவ்வாய் சீனாவின் Air China விமான சேவை மேலும் 60 புதிய A320neo விமானங்களை $9.53 பில்லியனுக்கு கொள்வனவு செய்ய இணங்கி உள்ளது. இவை 2028ம் ஆண்டு முதல் 2032ம் ஆண்டு வரையான காலத்தில் வழங்கப்படும்.
செவ்வாய் இன்னொரு சீன விமான சேவையும் மேலும் 30 புதிய A320neo விமானங்களை கொள்வனவு செய்ய இணங்கி உள்ளது. அதனால் மொத்தம் 145 விமானங்கள் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் பிரெஞ்சு சனாதிபதி மக்ரோன் சீனா சென்ற வேளையில் இந்த இணக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மக்ரோனுடன் Airbus நிறுவன CEO வும் சீனா சென்று இருந்தார். ரம்பின் வரியால் இடர்பாடும் ஐரோப்பிய நாடுகள் வேறு வழி இன்றி சீனாவுடன் இணைந்து இயங்க தள்ளப்பட்டு உள்ளன.
சீனா பெருந்தொகை விமானங்களை ஒரேயடியாக கொள்வனவு செய்வதால் Airbus மிக குறைந்த விலைக்கே மேற்படி விமானங்களை விற்பனை செய்கிறது.
