2025ம் ஆண்டில் சீனாவின் BYD என்ற மின்னில் இயங்கும் கார்களை தயாரிக்கும் நிறுவனம் 2.26 மில்லியன் கார்களை உலகம் எங்கும் விற்பனை செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் Tesla என்ற கார் நிறுவனம் 2025ம் ஆண்டு 1.64 மில்லியன் கார்களை மட்டுமே உலகம் எங்கும் விற்பனை செய்துள்ளது.
2024ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு Tesla விற்பனை தொகை 9% ஆல் குறைந்து உள்ளது. இரண்டாவது ஆண்டாக Tesla வின் உலக அளவிலான விற்பனை தொகை குறைந்து உள்ளது.
அதேவேளை 2024ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு BYD நிறுவனம் 28% அதிக கார்களை விற்பனை செய்துள்ளது.
BYD யின் தரமான கார்கள் மிக மலிவு விலையில் கிடைப்பது, Tesla CEO இலான் மஸ்க் அரசியலில் நுழைந்து எதிரிகளை அதிகரித்தமை, அமெரிக்க ரம்ப் அரசு மின் கார்களுக்கான ($7,500) மானியத்தை நிறுத்தியமை எல்லாமே BYD இந்த ஆண்டு Tesla வை பின் தள்ள காரணம் ஆகின.
சீனாவுக்கு அப்பால் பிரித்தானிய BYD யின் மிகப்பெரிய சந்தை ஆகியுள்ளது. 2025ம் ஆண்டு முதல் 9 மாதங்களில் BYD யின் விற்பனை தொகை பிரித்தானியாவில் முன்னைய ஆண்டிலும் 880% ஆல் அதிகரித்து இருந்தது.
அமெரிக்காவும், கனடாவும் தமது சந்தைகளை BYD க்கு பாரிய வரிகள் மூலம் தடுத்து இருந்தும் BYD உலக அளவில் அதிக கார்களை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
