அமெரிக்க டாலர் மீது கொண்ட பயம் காரணமாக உலக அளவில் பெருமளவு மத்திய வங்கிகள் தமது வெளிநாட்டு சொத்து கையிருப்பில் (foreign exchange reserve) அமெரிக்க டாலரின் அளவை குறைக்க உள்ளதாக பிரித்தானியாவை தளமாக கொண்ட OMFIF (Official Monetary and Financial Institutions Forum) கூறியுள்ளது.
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை 74 நாடுகளின் மத்திய வங்கிகள் வழங்கிய தரவுகளின் அடிப்படையிலேயே OMFIF மேற்படி கணிப்பை கூறியுள்ளது.
2001ம் ஆண்டு உலக மத்திய வங்கிகளின் கையிருப்பின் (reserve) 70.8% அமெரிக்க டாலரில் இருந்துள்ளன. அப்போது 18.4% கையிருப்பு யூரோவிலும், 5.4% ஜப்பானின் யென்னிலும், 3.1% பிரித்தானிய பவுண்ட்டிலும் இருந்துள்ளன.
தற்போது கையிருப்பில் அமெரிக்க டாலரின் பங்கு 58% ஆக குறைந்துள்ளது. அத்துடன் கனடிய டாலரும், சீன யுவானும் வளரும் கையிருப்பு நாணயங்கள் ஆகியுள்ளன.
முதலாம் உலக யுத்தத்தின் பின் தங்கமும், பிரித்தானிய பவுண்ட்டும் கையிருப்பு ஊடகங்களாக இருந்தன.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா வேகமாக வளர அதன் டாலரும் நம்பிக்கைக்குரிய நாணயம் ஆனது. தற்போது அமெரிக்க டாலர் நாணயத்தை இழந்து வருகிறது. அதற்கு அமெரிக்கா தனது நாணயத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதும் ஒரு காரணம்.
