உலகின் பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் சனத்தொகை வீழ்ச்சி அடைந்தாலும் இவற்றுள் பல நாடுகள், குறிப்பாக மேற்கு நாடுகள், குடிவரவு மூலம் தமது சனத்தொகையை அதிகரிக்க வைக்கின்றன. ஆனால் ஜப்பானின் சனத்தொகை நம் கண் முன்னே ஆவியாகி வருகிறது.
ஜப்பானில் தற்போது 100 வயதை தாண்டியோர் தொகை 107,677 ஆக உள்ளது. அதில் 80% முதியோர் பெண்கள். 1963ம் ஆண்டில் அங்கு 100 வயதை தாண்டியோர் தொகை 153 ஆகவும், 1981ம் ஆண்டில் இத்தொகை 1,000 ஆகவும், 1998ம் ஆண்டில் இத்தொகை 10,000 ஆகவும் இருந்தது.
2008ம் ஆண்டில் ஜப்பானின் சனத்தொகை 128 மில்லியன் ஆக இருந்தது. ஆனால் 2070ம் ஆண்டில் இதன் சனத்தொகை 87 மில்லியன் ஆக குறையும் என்று கணிக்கப்படுகிறது. அது 32% சனத்தொகை வீழ்ச்சி.
தற்போதைய சனத்தொகையின் 30% மானோர் 65 வயதை தாண்டியோர். 2070ம் ஆண்டில் 65 வயதை தாண்டியோர் தொகை 40% ஆக இருக்குமாம்.
ஒரு சனத்தொகை மாறாது தொடர அங்கு தாய்மார் சராசரியாக 2.1 குழந்தைகளை (fertility rate) பெறுதல் அவசியம். ஆனால் ஜப்பானில் இது கடந்த ஆண்டு 1.14 மட்டுமே.
சனத்தொகையை அதிகரிக்க ஜப்பானும் தற்போது குடிவரவை நாடினாலும், தற்போது ஜப்பானின் மொத்த சனத்தொகையின் 3% மட்டுமே குடிவரவாளர். அந்த 3% குடிவரவாளர் மீதே வெறுப்பு உருவாகி எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
